ஏல முறைகளில் மாற்றம் செய்யக்கோரி மதுரை நன்னீர் ஏரி மீனவர்கள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு

புதுடெல்லி: மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் மீன் பிடிக்கும் விவகாரத்தில் ஏல முறைகளில் மாற்றம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அணைகள், ஆண்டு முழுவதும் நீரோட்டமுள்ள சிற்றாறுகள், நீர் வீழ்ச்சிகள் பெரியளவில் கிடையாது. இதில் வைகை அணையும், ஆறும் மட்டுமே ஒட்டுமொத்த மதுரையின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் உள்ள மீன்களை பிடிக்க குத்தகை விடும் விவகாரத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி பல்வேறு புதிய விதிமுறைகளை அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறிப்பாக குத்தகை மற்றும் ஏலம் விடும் முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக ஒருமுறை ஏலம் எடுத்தால் மூன்று ஆண்டுகளுக்கு மீன் பிடிக்கும் உரிமை இருந்து வந்தது. ஆனால் அதனை தற்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரை மாவட்டம் முழுவதிலும் உள்ள நன்னீர் ஏரிகளில் அனுமதியின்றி மீன் பிடிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விதிமுறைகளுக்கு எதிராக பாரம்பரிய மீனவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள நன்னீர் ஏரிகளில் பாரம்பரிய மீனவர்களுக்கே மீன் பிடிக்கும் உரிமையை வழங்க வேண்டும். அதேபோல், ஏல விதிமுறைகளிலும் தற்போது உள்ளதை மாற்றம் செய்து புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: