ரூ.21,000 கோடி போதை பொருள் சிக்கிய வழக்கு கோவை தொழிலதிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: திடுக் தகவல்கள்

கோவை: குஜராத்தில் ரூ.21,000 கோடி போதை பொருள் சிக்கிய வழக்கில் கைதான கோவை தொழிலதிபர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த மாதம் குஜராத் துறைமுகத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது 2 கன்டெய்னர் லாரிகளில் 3 டன் எடையில் உச்ச போதை தரும் ‘‘ஹெராயின்’’ இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு 21 ஆயிரம் கோடி ரூபாய். ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இந்த போதை சரக்கு கப்பல் முகப்பவுடர் என்ற பெயரில் வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.   

இதில் தொடர்புடைய சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (45), இவரது மனைவி துர்க்கா பூரண வைஷாலி (39), கோவை வடவள்ளியை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் (56) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குஜராத் மாநிலம் பூஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் ராஜ்குமார் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வடவள்ளி-மருதமலை ரோடு ராமசாமி நகரில் உள்ள ராஜ்குமாரின் வீட்டில் அவரது தாய் சுசீலா (75) என்பவர் மட்டுமே இருந்தார். வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன் மற்றும் ஆகியவற்றை கைப்பற்றினர். ராஜ்குமார் பற்றிய விவரங்கள் அவரது தாயாருக்கு தெளிவாக தெரியவில்லை. வீட்டிற்கு அவர் எப்போது வருவார்?, என்ன தொழில் செய்கிறார்?, அவருக்கு வருமானம் எவ்வளவு?, அவரை தேடி யார் வருவார்கள்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

ராஜ்குமாரின் செல்போன், லேப்டாப்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாக தெரிகிறது. இவர் கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஹெராயின் சப்ளையராக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹெராயின் பவுடர் பல கோடி ரூபாய்க்கு ஏஜென்டுகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கலாம். கேரள மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள் வழியாக சரக்கு கப்பலில் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை ராஜ்குமார் கடத்தி வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ராஜ்குமார், தன்னை பற்றிய விவரங்களை வெளியே தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார். வெளி மாநிலம், வெளியூர்களில் அதிக நாட்கள் தங்கும் இவர் கோவைக்கு எப்போதாவது வந்து செல்வதாக தெரியவந்துள்ளது. செல்போனில் இவரது தொடர்பு வட்டத்தில் உள்ள சிலரிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து உள்ளூர் போலீசாரும் ராஜ்குமார் மற்றும் அவரது நட்பு வட்டத்தில் உள்ள போதை பொருள் வியாபாரிகள் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். கேரள மாநில துறைமுகங்கள் வழியாக சரக்கு கப்பலில் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை ராஜ்குமார் கடத்தி வந்திருக்கலாம் எனவும் போலீசார்

சந்தேகிக்கின்றனர்.

Related Stories: