தேசிய செயற்குழுவில் பதவி தராததால் பாஜக அடையாளத்தை துறந்த சுப்பிரமணியன் சுவாமி: டுவிட்டர் பயோவில் தகவல்கள் நீக்கம்

புதுடெல்லி: பாஜக தேசிய செயற்குழுவில் சுப்பிரமணியன் சுவாமிக்கு பதவி தராததால், அவர் தனது டுவிட்டர் பயோவில் பாஜக குறித்த தகவல்களை நீக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக சார்பில் 80 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய செயற்குழு பட்டியலை அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று வெளியிட்டார். 80 பேர் கொண்ட தேசிய செயற்குழு உறுப்பினர்களைத் தவிர 50 சிறப்பு  அழைப்பாளர்களும், 179 நிரந்தர அழைப்பாளர்களும் அந்த பட்டியலில் இடம்  பெற்றுள்ளன. ஏற்கனவே செயற்குழுவில் இடம்பெற்றிருந்த பாஜக எம்பி வருண் காந்தி, அவரது தாயாரும் எம்பியுமான மேனகா காந்தி, முன்னாள் அமைச்சர் பீரேந்தர் சிங், சுப்பிரமணியன் சுவாமி, வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்நிலையில், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று அவரது டுவிட்டர் பயோவில் (சுய விபரம்), பாஜக கொடியை முகப்பு பக்கத்தில் இருந்து எடுத்துவிட்டார். அதேபோல், கட்சியின் பெயரை தனது டுவிட்டர் பயோவில் இருந்து நீக்கிவிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்றும்  பொருளாதாரத்தில் ஹார்வர்ட் பி.எச்.டி படிப்பு குறித்தும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பயோவில், பாஜகவின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சமீபகாலமாக பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை கடுமையாக சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்து வந்தார். அதேபோல், அவ்வப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செயற்குழுவில் இடம்பெறாததால், அவர் தனது டுவிட்டர் பயோவில் பாஜக குறித்த தகவல்களை நீக்கியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவில் தொடர்ந்து நீடிக்கிறாரா? அல்லது பாஜகவின் சில தலைவர்களை போல் கட்சிப் பணியில் ஒதுங்கிக் கொண்டாரா? என்று ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

Related Stories: