சிவகாசியில் பத்திரிக்கை வைத்து பள்ளிக்கு அழைப்பு-அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

சிவகாசி : அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக கல்வியின் தரத்தை உயர்த்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் புது விதமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் பெற்றோர்களுக்கு பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்து வருகின்றனர். கல்வி உதவித்தொகை, இலவச நோட்டு புத்தகங்கள், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்மார்ட் கிளாஸ் கல்வி கற்றல் உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை பத்திரிக்கை அச்சடித்து வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,`` கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றறை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றல் அதிகரிக்கும் சூழல் உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்துவர பல்வேறு முயற்சிகளில் இதுவும் ஒரு முயற்சியாக செய்து வருகின்றோம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் சாதனைகளை பட்டியலிட்டு பத்திரிகை அடித்து பெற்றோர்களுக்கு கொடுத்து வருகிறோம். வட்டார கல்வி அலுவலர் கருப்பசாமி, பள்ளி தலைமையாசிரியர் தனபால் ஆகியோர் ஆலோசனையின்படி வீடு, வீடாக பத்திரிக்கை அழைப்புகளை கொடுத்து வருகிறோம்’’ என்று கூறினார்.

Related Stories: