திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் 14 பேருக்கு குற்றப் பின்னணி: உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக 24 பேரை நியமித்து ஆந்திர அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை எண் 245ஐ எதிர்த்து வழக்கறிஞர் அஸ்வினி குமார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று அமராவதியில் உள்ள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அஸ்வினி குமார், ‘திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள 14 பேருக்கு குற்றப்பின்னணி உள்ளது. மேலும் 4 பேர் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 18 பேரை எதிர்தரப்பினர்களாக சேர்க்க வேண்டும்,’ என்று நீதிபதிகள் முன்பு வாதிட்டார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த 18 பேரையும் எதிர்தரப்பினர்களாக அங்கீரித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், நவராத்திரி விடுமுறைக்கு பின்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தேவஸ்தான வழக்கறிஞரிடம், இதற்கும் தேவஸ்தானத்திற்கும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய 18 பேருக்கும் இதில் எதிர்ப்பு இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: