குற்றச்சம்பவங்களை தடுக்க ஊட்டி நகரில் 600 கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி நகரில் அனைத்து பகுதிகளிலும் வணிகர்களின் ஒத்துழைப்புடன் 600 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.  

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல ஆயிரம் பேர் வந்துச் செல்லும் நிலையில், சிலர் சுற்றுலா பயணிகள் போர்வையில் சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் ஊட்டி நகரின் அனைத்து வீதிகள், சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி போலீசார் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி, ஊட்டி நகரின் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, அப்பர்பஜார் சாலை, லோயர் பஜார் சாலை, காபி அவுஸ் மற்றும் ஏடிசி., உட்பட அனைத்து சாலைகளிலும் தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது.

அந்தந்த பகுதிகளில் உள்ள வணிகர்களின் ஒத்துழைப்புடன் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ேகமராக்கள் அந்தந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட கடைக்காரர்கள் கண்காணிக்கும் வகையில் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம் ஏதேனும் திருட்டு சம்பவங்கள் நடந்தாலோ அல்லது வேறு சம்பவங்கள் நடந்தாலோ குற்றவாளிகளை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஊட்டி நகர டிஎஸ்பி., மகேஷ்வரன் கூறுகையில், சுற்றுலா நகரமான ஊட்டியில் தற்போது வணிகர்களின் ஒத்துழைப்புடன் நகர் முழுவதும் 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது. தற்போது 310 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து கேமரா பொருத்தும் பணிகள் நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் நகரின் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்தப்படும்.

மேலும், இந்த கேமராக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏதேனும் ஒரு கடையில் உள்ள கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தாலோ அல்லது வேறு சம்பவங்கள் நடந்தாலோ போலீசார் அதில் உள்ள பதிவுகளை திரட்டுவார்கள், என்றார்.

Related Stories: