வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் பேரிகார்டுகள்

நாகர்கோவில்: வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் பேரிகார்டுகள் வைத்துள்ளனர். நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவில் அருகே விசுவாசபுரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சாலை ஓரங்களில் ஏராளமான வாகனங்கள் நிற்பதால் அடிக்கடி விபத்துக்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பர பலகைகளும் விபத்துக்கு காரணமாகி விடுகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில், வாகனத்தை முந்த முயன்ற அரசு பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நின்ற  4 பைக்குகள், 3 கார்கள் சேதம் அடைந்தன. அந்த பகுதியில் இருந்த ஓட்டலும் இடிந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்பட வில்லை. அன்றைய தினம் மாலையில் மாறாங்கோணம் பகுதியை சேர்ந்த கிறிஸ்துதாஸ் (54) என்பவர் குடும்பத்துடன் தூத்துக்குடி சென்று விட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள டீ கடை முன், காரை நிறுத்தி விட்டு  டீ குடித்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் வேகமாக வந்த டெம்போ, கிறிஸ்துதாஸ் மீது மோதியது. இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்த கிறிஸ்துதாசை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். குடும்பத்தினர் கண் எதிரில் நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகார்டுகள் வைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக தமிழ்முரசு மாலை நாளிதழிலும் செய்தி வெளியானது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி. ஆகியோர் உடனடியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிகார்டுகள் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி தற்போது அந்த பகுதியில் பேரிகார்டுகள் வைத்துள்ளனர். சாலையை ஆக்கிரமித்துள்ள விளம்பர போர்டுகளையும் அகற்றி உள்ளனர். அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related Stories: