22 லட்சம் பேர் 2வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை: மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: 22 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெறும் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த செயலாளர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த இரண்டு மாத தரவுகளின்படி தமிழகம் முழுவதும் 90% தடுப்பூசி போடாதவர்கள் தான் உயிரிழந்துள்ளனர். மேலும் தடுப்பூசி போடாதவர்கள் தான் பெரும் அளவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். நேற்றைய கணக்கின் படி, முதியோர்களுக்கு 42% முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் செலுத்தி கொண்டவர்களின் விகிதம் அதைவிட குறைவாக உள்ளது. முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தான் சவாலான காரியமாக உள்ளது. இன்று நடைபெறும் முகாம்களை முதியோர்கள் உள்பட அனைவரும் முன் வந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும். முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட 22 லட்சம் பேர், இன்னும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை.

கடந்த வாரத்தில் 10 லட்சம் பேருக்கு 2ம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் அதிக அளவில் தடுப்பூசி போடப்படுவதால், 2ம் தவணை தடுப்பூசிக்கு தகுதிவாய்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும். தீவிர கவனிப்பு தேவைப்படும் நிலையில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு உள்ளது. இந்தாண்டில் மட்டும் 2919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: