டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய பலத்த மழை

திருச்சி: தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இலங்கை முதல் தமிழக கடலோர பகுதி வரையில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் விடிய விடிய மழை கொட்டியது. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு 11 மணி முதல் விடிய விடிய கனமழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை மழை பொழிந்தது. தஞ்சையில் இன்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது.

ஒரத்தநாடு, திருவையாறு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில்  நேற்றிரவு கன மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளான அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணி முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக, பாசன பகுதிகளில் உள்ள 110 ஏரிகளிலும் தண்ணீர் அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான மழை பெய்தது. பெரம்பலூர் மாவடத்தில் பகலில் வெயில் சுட்டெரிக்க, மாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்தது. திருச்சி மாநகரில் இரவு 11 மணி முதல் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.  இன்று காலை 7 மணி வரை மழை நீடித்தது. டெல்டாவில் பல இடங்களில் இன்று காலை 8 மணி வரை மழை பொழிவு இருந்தது. தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, உள்பட 15 மாவடடங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டாவில் பெய்த மழை அளவில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 185 மி.மீ. பதிவாகி உள்ளது.

Related Stories: