வேலூர், காட்பாடியில் ஓட்டல்கள், தெருவோர கடைகள் உட்பட 22 இடங்களில் ஆய்வு-தரமற்ற 6 லிட்டர் எண்ணெய், கலர் சேர்த்த சிக்கன் பறிமுதல்

வேலூர் :வேலூர், காட்பாடியில் ஓட்டல்கள், தெருவோர கடைகள் உட்பட 22 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் தரமற்ற 6 லிட்டர் எண்ணெய், கலர் சேர்த்த சிக்கன்களை பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் தரமற்ற சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள், சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் சூடுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது போன்ற விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர், சத்துவாச்சாரி, காட்பாடி, விருதம்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்கள், தெருவோர கடைகளில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஓட்டலில் ஏற்கனவே பயன்படுத்தி எண்ணெய் மீண்டும் பயன்படுத்த வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டலில் இருந்த 6 லிட்டர் எண்ணெய்யை பறிமுதல் செய்தனர். அதேபோல் காட்பாடி, விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தெருவோர கடைகளில் ஆய்வு செய்தனர். இதில் சிக்கன் பக்கோடாவில் கலர் அதிகம் சேர்க்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்த 1 கிலோ சிக்கன் பறிமுதல் செய்தனர். மேலும் தெருவோர கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. சுத்தமான குடிநீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று 22 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

Related Stories: