வேலூர் சத்துவாச்சாரியில் சாலையில் திரியும் மாடுகள் திருப்பிதர முடியாது-உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

வேலூர் :  வேலூர் சத்துவாச்சாரியில் நேற்று சாலையில் சுற்றித்திரிந்த 6 கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மாடுகள் மீண்டும் சாலையில் திரியவிட்டால் திரும்ப ஒப்படைக்க முடியாது என மாநகராட்சி எச்சரித்துள்ளது.வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக அண்ணா சாலை, ஆற்காடு சாலை, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், பாலாறு மேம்பாலம், காட்பாடி சாலை ஆகிய பகுதிகளில் கால்நடைகள் கும்பலாக சுற்றித்திரிவதும், திடீர் திடீரென அவை சண்டையிட்டு நடுரோட்டில் ஓடுவதுமாக உள்ளது.

இதனால் பலர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். இந்நிலையில், வேலூர் ஆற்காடு சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் குறித்து தினகரனில் நேற்று படம் வெளியானது. இதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 6 மாடுகள் சுற்றித்திரிந்தது தெரியவந்தது.

உடனடியாக அவற்றை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு தலா ₹5 ஆயிரம் அபராதம் விதித்தனர். ‘தொடர்ந்து சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியவிட்டால் அபராத தொகை அதிகரிக்கப்படும், என்றும் கால்நடைகளை திரும்ப ஒப்படைக்க முடியாது’ எனவும் கால்நடைகளின் உரிமையாளர்களை அழைத்து மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories: