பள்ளிகளில் சத்துணவு வழங்கும் பிஎம் போஷான் திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்: 11.80 கோடி குழந்தைகள் பயனடைவர்

புதுடெல்லி: பள்ளிகளில் சத்துணவு வழங்கும் திட்டத்தை, ‘பிஎம் போஷான் சக்தி நிர்மான்’ என்ற புதிய பெயருடன் அடுத்த 5 ஆண்டிற்கு ரூ1.30 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பள்ளிக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கச் செய்ய நாடு முழுவதும் மதிய உணவு தேசிய திட்டம் என்ற பெயரில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதை தேசிய அளவிலான திட்டமாக்கி ‘பிஎம் போஷான் சக்தி நிர்மான்’ என பெயர் மாற்றம் செய்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ1.30 லட்சம் கோடி நிதியுடன் செயல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இத்திட்டத்துக்கு 2021-22ம் ஆண்டு முதல் 2025-26ம் ஆண்டு வரை, ஒன்றிய அரசு ரூ54,061.73 கோடியும்,  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ரூ31,733.17 கோடியும் செலவு செய்யும்.  உணவு தானியங்களுக்கான கூடுதல் செலவான ரூ45,000 கோடியை ஒன்றிய அரசு ஏற்கும்.  ஆகையால் இத்திட்டத்துக்கான  மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ 1,30,794.90 கோடி ஆகும். இதன் மூலம், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஒருவேளைக்கு ஊட்டச்சத்துமிக்க சத்துணவு வழங்கப்படும். இதில், நாடு முழுவதும் 11.20 லட்சம் பள்ளிகளில் படிக்கும் 11.80 கோடி குழந்தைகள் பயனடைவர்.

Related Stories: