ரூ50 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிவனாண்டியை சிபிஐ விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீதான வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. சென்னையில், ‘சவுத் இண்டியா பாட்டிலிங்’ என்ற நிறுவனத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்தால் லாபத்தில் 25 சதவீத பங்கு தருவதாக பாண்டிராஜ் என்பவரை சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் அணுகினர்.  இதையடுத்து, தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் ரூ50 லட்சத்தை பாண்டிராஜ் அந்த கம்பெனியில் முதலீடு செய்தார். ஆனால், அவருக்கு சேர வேண்டிய பங்குத் தொகை கிடைக்கவில்லை.

அவர் விசாரித்ததில் அவர் முதலீடு செய்ததற்கான எந்த ஆதாரமும் கம்பெனியில் இல்லை என்று தெரிந்தது. இது பற்றி சென்னை மத்திய குற்றப்பிரிவில் சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் மீது கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரலில் அவர் புகார் அளித்தார். இந்நிலையில், இந்த புகாரை வாபஸ் வாங்கும்படி அப்போதைய ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி தனக்கு நெருக்கடி தந்ததாகவும் பாண்டிராஜ் புகார் அளித்தார். வழக்கின் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு முன் ஆஜரான பாண்டிராஜை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பி, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி 70க்கும் மேற்பட்ட வக்கீல்கள், விடுமுறை தினத்தன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மூன்று வழக்குகளையும் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், பின்னர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இந்த உத்தரவை எதிர்த்து சிவனாண்டி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு கடந்த 2018ல் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ‘ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்கலாம். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு  விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதேபோல், சுஜை ஆனந்த், சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு முடித்து வைக்கப்படுகிறது,’ என தெரிவித்தனர்.

Related Stories: