ராயபுரம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலில் கடத்தி வந்த 4 டன் போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: வடமாநிலங்களில் இருந்து கூட்ஸ் ரயிலில் மின்சாதன பொருட்கள் கடத்தப்படுவதாக வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம்  தகவல் கிடைத்தது. அதன்பேரில், வணிக வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ராயபுரம் ரயில் நிலையத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பாக்கு உள்ளிட்ட பொருட்கள் 4 டன்னுக்கும் அதிகமான அளவில் சரக்கு ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இன்றி பல லட்சம் மதிப்புடைய மின்சார பொருட்கள் மற்றும் செல்போன்கள், உணவு பொருட்கள் கொண்டு வரப்பட்டதும், இந்த பொருட்கள் அனைத்தையும் லாரிகள் மற்றும் கன்டெய்னர்களில் ஏற்றிக்கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அப்போது வடமாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள், அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை ஆகிய காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பறிமுதல் செய்த அனைத்து பொருட்களையும் வாகனங்களில் ஏற்றி கிரீம்ஸ் ரோடு சாலையில் அமைந்துள்ள வணிகவரி துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மின்சாதன பொருட்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்தும் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து குறைந்த விலையில் வாங்கி தமிழகத்திற்கு கடத்தி வந்து பல்வேறு பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பாக்கு உள்ளிட்ட போதைப்பொருட்களை கொண்டு வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்ல இருந்த கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் நசரத்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் லாஜிஸ்டிக் நிறுவனத்தை சேர்ந்த மேலாளர் ராய் சிங் (36) ஆகியோரிடம் வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Related Stories: