சட்டவிரோத பணப்பரிமாற்றம் புகார் கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான 10 இடங்களில் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை

சென்னை: சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் தன்ராஜ் கோச்சார். தொழிலதிபர் இவர், கோச்சார் குழுமம் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். வட்டிக்கு பொதுமக்களிடம் பணம் கொடுத்து திரும்ப செலுத்த முடியாத நபர்களின் நிலங்களை அபகரித்ததாக தன்ராஜ் கோச்சார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தனது நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பல கோடிக்கு முதலீடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பணப்பரிமாற்றம் செய்து அந்த பணத்தை தனது நிறுவனங்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கோச்சார் குழுமம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக, பணத்தை இழந்தவர்கள் அமலாக்கத்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில், கோச்சார் குழுமத்துக்கு சொந்தமான சென்னை வேப்பேரியில் உள்ள அவரது வீடு, எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள அலுவலகம், கடைகள் என 10 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது வேப்பேரில் உள்ள வீடு ஆட்கள் இன்றி பூட்டப்பட்டிருந்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து பிறகு சோதனை செய்தனர். 10 இடங்களில் நடந்த சோதனையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நள்ளிரவு வரை நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் பணம், நகைகள் குறித்து கோச்சார் குழும உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: