ஐஏஎஸ் அதிகாரி மீது மத அவதூறு புகார்: போலீஸ் துணை கமிஷனர் விசாரணை

கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி முகமது இஃப்திகாருதீன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த மத நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, குறிப்பிட்ட மதத்தை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், வேறொரு மதத்தை பின்பற்றுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்கிறார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மற்ெறாரு வீடியோவில், குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பேச்சாளர் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பதும், ஐஏஎஸ் அதிகாரி முகமது இஃப்திகாருதீன் தரையில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும் உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்த பூபேஷ் அவஸ்தி என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கான்பூர் போலீஸ் கமிஷனர் அசீம் அருண் கூறுகையில், ‘போலீஸ் துணை கமிஷனர் (கிழக்கு) சோமேந்திர மீனா, ஐஏஎஸ் அதிகாரி முகமது இஃப்திகாருதீன் தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த வீடியோ உண்மையானதா? அல்லது மார்பிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

Related Stories: