டாஸ்மாக் கடையில் ரகளை: போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க மாடி வீடுகளில் தாவிய வாலிபர்

ஆரணி: ஆரணி டாஸ்மாக் கடையில் ரகளை செய்த வாலிபர் போலீசாரிடம் சிக்காமல் வீட்டின் மாடிகளில் தாவி ஓடினார். அவரை பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காந்தி சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று மாலை 5 மணியளவில் வாலிபர் ஒருவர் மது வாங்க வந்தார். அப்போது போதையில் இருந்த அவர், குறைவான பணத்தை கொடுத்து மது கேட்டுள்ளார். ஆனால் விற்பனையாளர், குறைவான பணத்திற்கு மது தரமுடியாது என தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர், விற்பனையாளரிடம் ரகளையில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் பழைய பஸ் நிலையம் பகுதிக்கு ஓடினார். அந்த வாலிபரை பிடிக்க போலீசார் விரட்டிச்சென்றனர். ஆனால் அவர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்கூல் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடி மீது ஏறினார். போலீசாரும் அந்த மாடி மீது ஏறினர். இதனால் அந்த வாலிபர் போலீசாரிடம் சிக்காமல் பக்கத்தில் உள்ள மாடி வீடு, ஓடு வேய்ந்த வீடு, சிமெண்ட சீட் வீடு என அடுத்தடுத்து தாவி, தாவி தப்பியோடினார்.

இதைக்கண்ட பொதுமக்களும் போலீசாருடன் சேர்ந்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர், என்னை பிடிக்க முயன்றால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி மிரட்டினார். இதனால் போலீசார் அந்த வாலிபரிடம் நைசாக பேச்சுக்கொடுத்தனர். பின்னர் நைசாக மேலே ஏறி பொதுமக்கள் உதவியுடன் சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு காவல்நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

விசாரணையில் வேலூர் பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், இவர் ஆரணியில் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதும், அதனால் போதையில் இருந்ததும், மதுவை வாங்க சென்று கடையில் தகராறு செய்ததும் தெரியவந்தது. மேலும் பாக்கெட்டில் சிறிது கஞ்சாவை வைத்திருந்த அவர், போலீசார் துரத்தியதால் அதை வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories: