மார்த்தாண்டத்தில் சாலையில் திடீர் வாழை நடும் போராட்டம்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் சாலையை சீர் செய்யக்கோரி திடீரென்று வாழை நடும்  போராட்டம் நடந்தது. மார்த்தாண்டம் காந்தி மைதானத்திலிருந்து வெட்டுவெந்நி வரை குழித்துறை நகராட்சி சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப்லைன் போடுவதற்காக ரோடு தோண்டப்பட்டது. பின் வீடு மற்றும் கடைகளுக்கு பைப் இணைப்பு கொடுப்பதற்காக மீண்டும் தோண்டப்பட்டது. இந்த பகுதியில் தொடர்ந்து தார் போடப்பட்டது. ஆனால் குடிநீர் இணைப்புகளுக்காக பல பகுதிகளில் மீண்டும் தோண்டப்பட்டது.

இதனால் தற்பொழுது சாலை குண்டு குழிகள் நிரம்பி படுமோசமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக ஏராளமான டவுன் பஸ்கள் மற்றும் வாகனங்களும் சென்று வருகிறது. நேற்று முன்தினம் பெய்த தொடர் மழையால் இந்த குண்டு குழிகள் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சி அளிக்கிறது.  இந்த ரோடை முழுமையாக தார் போட்டு சீர் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளும் பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி  வருகின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் சாலையை சீரமைக்ககேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

நேற்று இந்த குண்டு குழிகளில் பைக்கில் வருபவர்கள் விழுந்து எழுந்து செல்வது தொடர்கதையாக காணப்பட்டது. மேலும் அடிக்கடி இந்த ரோட்டில் செல்லும் வாகனங்களும் பழுதுபட்டது. இதையடுத்து சாலையை முழுமையாகச்  சீர் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் நேற்று திடீரென்று வாழை நடும் போராட்டம் நடந்தது.ஜெயசிங்  தலைமை நடந்த போராட்டத்தில் ராஜேஷ், சதீஷ்குமார், ராஜன், கிறிஸ்டோபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். குளம் போல் காட்சி அளித்த பகுதியில் வாழை நட்டு வைக்கப்பட்டது.

Related Stories:

>