தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம்!: நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிட ஒன்றிய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் நேரில் வலியுறுத்தல்..!!

டெல்லி: நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என்றும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமசந்திரன் ஆகியோர் நேரில் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார். வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்தார். பின்னர் ஒன்றிய ஜவுளி தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர். கீழடி அகழாய்வு பணிகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைவதாகவும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2 இடங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பாதுகாப்பு காரிடர் அமைக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டுக்கு வாரந்தோறும் தலா 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஒன்றிய அமைச்சர்கள் அதனை வழங்குவதாக உறுதி அளித்துள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: