வெள்ளியூர் ஊராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

திருவள்ளுர்: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு பல்வேறு இடங்களில் மக்களை கவரும் வகையில் பரிசு பொருட்களை வழங்கி விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3ம் கட்டமாக 1 லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 913 சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி ஒரே நாளில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 100 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் பொதுமக்களை கவரும் வகையில் திருவள்ளூர் ஒன்றியம், வெள்ளியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் தலா ஒரு கிராம் தங்க நாணயம் என 6 பேருக்கு வழங்கப்படும் என அறிவிப்பு செய்திருந்தது. இதனை தொடர்ந்து ஒரே நாளில் அதிகளவில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வந்தனர். வெள்ளியூர் ஊராட்சியில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.

இதில் குலுக்கல் முறையில் 6  நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தலா 1 கிராம் தங்க நாணயத்தை ஊராட்சி துணை தலைவர் டி.முரளி கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் டி.எம்.எஸ் வேலு, ஊராட்சி தலைவர் பப்பி முனுசாமி ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் யுவராஜ், மருத்துவர் சரவணன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: