குமாரமங்கலம் காட்டுவாரியில் பாலம் கட்டும் பணியால் மழைநீர் வடிய வழியின்றி நெல் வாழைகள் மூழ்கி பாதிப்பு-விவசாயிகள் கோரிக்கை ஏற்று தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை

குளித்தலை : குமாரமங்கலம் காட்டுவாரியில் பாலம் கட்டும் பணியால் மழைநீர் வடிய வழியின்றி நெல், வாழைகள் மூழ்கி பாதிக்கப்பட்டது. தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை, லாலாபேட்டை, பிள்ளாபாளையம், ராஜேந்திரம், மருதூர், மேட்டுமருதூர், கூடலூர், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்த மழை நீரால் சுமார் 3ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்து வருகிறது. நாற்று நட்டு 20 தினங்களே ஆன நிலையில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.

அதேபோல் வாழை சாகுபடியிலும் மழைநீர் புகுந்து வாழையின் பாதியளவிற்கு தண்ணீர் மூழ்கி வடிய வழியில்லாமல் உள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அனைத்து வடிகால் வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டிருந்தது. இருப்பினும் மழைநீர் வடியாததற்கு முக்கிய காரணம் குளித்தலை அருகே குமாரமங்கலம் பகுதி வழியாக செல்லும் காட்டுவாரியில் ஏற்கனவே குறுகலாக இருந்த பாலத்தை அகலப்படுத்தும் பொருட்டு கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலைத்துறை (நபார்டு) சார்பில் அகலமான புதிய பாலம் கட்டும் பணி நடந்து வருகின்றது.

இப்பணியால் குமாரமங்கலம் பகுதி வழியாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சென்றுவர தற்காலிமாக காட்டுவாரியின் மேல் தண்ணீர் செல்வதற்காக சிறிய குழாய்கள் பொருத்தப்பட்டு அதன்மீது மண்சாலை அமைக்கப்பட்டது.இந்நிலையில் காட்டுவாரியில் அமைக்கப்பட்ட குழாயின் வழியாக தண்ணீர் சரிவர செல்வதில்லை, தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாய நிலங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கின்றது. இதனால் இந்த நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடையும் வகையில் உள்ளது. இதுகுறித்து குளித்தலை பகுதி விவசாயிகள் ஆற்றுபாதுகாப்புதுறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முறையிட்டனர்.

அதன்பின் தற்போது குமாரமங்கலத்தில் பாலம் கட்டும் பணிக்காக மண்சாலை போடப்பட்டதை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியினை ஆற்றுபாதுகாப்பு கோட்ட உதவி பொறியாளர் செங்கல்வராயன், அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுடன் காட்டுவாரியில் தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதே போல் காட்டுவாரியில் இருந்து வரும் தண்ணீரை விரைவாக வெளியேற்றி காவிரி ஆற்றில் இணைக்ககூடிய பெட்டவாய்த்தலை மணல் போக்கி என்று சொல்லக்கூடிய தடுப்பு அணை பாலத்தில் உள்ள அனைத்து நீர்வழி பாதைகளையும் திறந்து விடப்பட்டு தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். அதிகாரிகள் துரித நடவடிக்கையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>