கேசினோ சந்திப்பில் உள்ள செயற்கை நீரூற்றை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி: ஊட்டி நகரில் கேசினோ சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றைசீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும், இயற்கை அழகையும் கண்டு ரசித்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக பல்வேறு அலங்காரங்கள் மற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. ஊட்டி நகராட்சி சார்பிலும் பல்வேறு பகுதிகளிலும், குறிப்பாக சாலை சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை முறையாக பராமரிப்பதில்லை. குறிப்பாக, ஊட்டி நகரின் முக்கிய சாலை சந்திப்பான கேசினோ சந்திப்பு வழித்தடத்தை ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பயன்படுத்துகின்றனர். மேலும், நகருக்குள் வரும் சுற்றுலா பயணிகள் கமர்சியல் சாலை வழியாக மார்க்கெட் மற்றும் கடை வீதிகளுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், கேசினோ சந்திப்பு பகுதியில் நகராட்சி சார்பில் ஒரு செயற்கை நீருற்று அமைக்கப்பட்டது.

ஆனால், அதனை முறையாக நகராட்சி நிர்வாகம் பராமரிப்பதில்லை. இதனால், புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இந்த செயற்கை நீருற்றை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>