கட்சி தாவல் தடை சட்டம் பற்றி சிம்லா மாநாட்டில் ஆலோசனை: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பெங்களூரு: ‘சிம்லாவில் நடக்கும் சபாநாயகர்கள் மாநாட்டில் கட்சி தாவல் தடை உள்ளிட்ட விவகாரங்களில் சபாநாயகர்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்,’ என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். பெங்களூரு விதான சவுதா கூட்டரங்கில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பேரவை தலைவர் விஸ்வேஷ்வர ஹெக்டே காகேரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, ஓம் பிர்லா கூறியதாவது: மக்கள் மன்றங்களில் விவாதங்கள் அதிகம் நடைபெற வேண்டும்.

விவாதங்களின் போது அது காரசாரமாக இருந்தாலும் விதிகள் மீறாமல் இருக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்றம் மற்றும் சட்ட பேரவையில் கூச்சல் குழப்பம் காணப்படுகின்றன. மக்கள் மன்றங்கள் இவ்வாறு மாறுவதற்கு எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது. மக்கள் மன்றங்களில் சுமூகமாக விவாதம் நடைபெற வேண்டும் என்பதற்காக சபாநாயகர் மற்றும் மாநில முதல்வர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தாவல் தடை சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் சபாநாயகர்களுக்கு உள்ள அதிகாரம் பற்றி, அடுத்த மாதம் 26ம் தேதி சிம்லாவில் நடக்கும் சபாநாயகர்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும்.

ராஜஸ்தான் சட்ட பேரவை சபாநாயகர் சி.பி. ஜோஷி தலைமையிலான குழுவின் பரிந்துரைகள், இதில் விரிவாக விவாதிக்கப்படும். பிறகு, ஒன்றிய அரசுக்கு அவை பரிந்துரை செய்யப்படும். நாடாளுமன்றம், சட்ட மன்றங்களில் விவாதங்கள் அதிகளவில் நடைபெற  வேண்டும் என்பதற்காக பரிந்துரை செய்வது மட்டுமே எங்களின் கடமை. அதே நேரம் எவ்விதமான சட்டம் கொண்டு வரவேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>