பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிகளை பிடிக்க விடிய, விடிய போலீசார் மாஸ் ரெய்டு-6 பேர் கைது

பெரம்பலூர் : தமிழக டிஜிபி உத்தரவு எதிரொலியாக பெரம்பலூரில் நள்ளிரவு 12.30 மணிக்கு பிறகு ரவுடிகளை பிடிக்க, எஸ்பி தலைமையில் 15 வாகனங்களில் 6 மணி நேரம் மாஸ்ரெய்டு நடத்தப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுத்து நிறுத்த, காவல்துறை மூலம், ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க, தமிழ்நாடு முழுவதும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அதிரடியாக மாஸ்ரெய்டு நடத்த அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி தலைமையில், ஏடிஎஸ்பிக்கள் ஆரோக்கிய பிரகாசம், பாண்டியன், டிஎஸ்பிக்கள் சஞ்சீவ்குமார், வளவன்,மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்.இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படை போலீசார், காவல்நிலை போலீசார் என 50க்கும் மேற்பட்டோர் 15 வாகனங்களில் மாஸ்ரெய்டு நடத்தினர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு எஸ்பி மூலம் 4 இன்ஸ்பெக்டர்களுக்கு ரகசியமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பேரில், போலீசார் சங்குப்பேட்டை, விளாமுத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, திருநகர், துறைமங்கலம், எளம்பலூர் சாலை, ஆலம் பாடிரோடு என நகர்புறங்களில் தனித்தனியாக ஏரியா பிரித்து ரவுடிகளை பிடிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் வெளிவந்த 32 ரவுடிகளின் வீடுவீடாக அதிரடியாக புகுந்த போலீசாரிடம், சுற்றி வளைக்கப்பட்ட ரவுடிகள் சிலர் புலம்பித் தீர்த்தனர். தான் தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை என சத்தியம் செய்தும் புலம்பினர்.

இருந்தும் பெரம்பலூர் ராதா கிருஷ்ணன் தெருவை சேர்ந்த மணி (47), கோனேரிப்பாளையம், பாரதிநகரைச் சேர்ந்த ராஜா என்கிற பிரபு (34), பெரம்பலூர் சங்குப்பேட்டை, டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரு, மணிகண்டன்(25), பெரம்பலூர் 12வது வார்டு தமிழ்ச்செல்வன்(31), பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்த வினோத் (37), பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு அப்துல் கரீம்(24) ஆகிய 6 பேர்களை கைது செய்தனர். இவர்களை நேற்று பெரம்பலூர் ஆர்டிஓ நிறைமதி முன்னிலையில் ஆஜர்படுத்தி, ஓராண்டுக்கு இனி குற்றசெயல்களில் ஈடுபடமாட்டேன் என்கிற உறுதி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.பெரம்பலூர் நகரில் 12.30மணிக்கு தொடங்கி அதிகாலை 6.30 மணிவரை 6மணி நேரத்திற்கு நடத்தப்பட்ட மாஸ் ரெய்டு ரவுடிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: