ஈரோட்டில் கட்டி முடித்து 2 ஆண்டுகளாகியும் ஒப்படைக்கப்படாத வீடுகள்: குடியேறும் முன்பே பழுதான வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள்

ஈரோடு: ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாத 1072 வீடுகள் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. குடியேறும் முன்பே தொட்டால் உதிரும் சிமெண்ட் பூச்சுகள் சுவர்களில் விரிசல் என அச்சுறுத்துவதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு நகரில் குடிசைமாற்று வாரியத்தின் மூலம் 1983ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தால் அங்கிருந்தவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டில் அப்புறப்படுத்தப்பட்டனர். புதிய குடியிருப்புகள் கட்டியபின் மீண்டும் அவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்படும் என உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இதன்பின் பெரியார் நகரில் 336 வீடுகள், கருங்கல்பாளையத்தில் 272 வீடுகள், மற்றும் புதுமை காலனியில் 464 வீடுகள் என 3 இடங்களில் மொத்தம் 1,072 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் 125 கோடி ரூபாய் மதிப்பில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் தாமதமாக 2017ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமான பணி கடந்த 2019ல் முடிவடைந்தது. கட்டி முடித்து பெயரளவிற்கு திறப்பு விழாவும் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பயனாளிகளுக்கு உறுதி அளித்தபடி வீடுகள் ஒப்படைக்கப்படவில்லை. வீடுகள் இலவசமாக வழங்கப்படும் என கூறிய அதிகாரிகள் பின்னர் 1,25,000 செலுத்துமாறு கேட்பதாகவும் இந்த தொகையை செலுத்த இயலாததால் வீடுகளை பெற முடிவில்லை என பயனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடியேறும் முன்பாகவே குடியிருப்பின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கைகளில் தொட்டாலே சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் உதிர்வதாக வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளில் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளும் காற்றில் கீழே விழுந்து சேதமடைந்து கிடக்கின்றன. மேலும் ஏற்கனவே இருந்த வீட்டின் அளவை குறைத்து குறுகிய அளவில் அறைகள் என 280 சதுரஅடியில் மட்டுமே வீடுகளை கட்டி இருப்பதாகவும் பயனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>