சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கன்டெய்னர் லாரி மீது மோதி டாரஸ் லாரி கவிழ்ந்தது: கடும் போக்குவரத்து பாதிப்பு

மதுராந்தகம்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், கன்டெய்னர் லாரி மீது ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி மோதி கவிழ்ந்தது மதுராந்தகம் அருகே உள்ள கல்குவாரியில் இருந்து, நேற்று மதியம் ஒரு லாரி, கருங்கற்களை ஏற்றி கொண்டு, தாம்பரத்தில் உள்ள கிரஷருக்கு புறப்பட்டது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, புக்கத்துறை அருகே திரும்ப முயன்றது. அந்த நேரத்தில், மின்னல் வேகத்தில் கற்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி, கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி, நடு ரோட்டில் கவிழ்ந்தது.

அதில், லாரியின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. லாரியில் இருந்த கற்கள் சிதறி சாலையில் விழுந்தன. ஆனால், டிரைவர் அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து தப்பிவிட்டார். இந்த திடீர் விபத்தால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்ற வாகனங்கள் செல்ல வழியில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக சாலையின் இருபுறமும் சுமார் 4 கிமீ தூரத்துக்கு வரிசை கட்டி நின்றன.

தகவலறிந்து படாளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலையில் கவிழ்ந்த லாரியை, ரெக்கவரி வாகனம் மூலம் சுமார் 2 மணிநேரம் போராடி அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த லாரியை காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: