நடுவானில் இயந்திர கோளாறு விமானி சாமர்த்தியத்தால் 123 பேர் உயிர் தப்பினர்

மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து 117 பயணிகள் உட்பட 123 பேருடன் அந்தமானுக்கு புறப்பட்ட ஏர் இண்டியா விமானம், நடுவானில் திடீர் இயந்திர கோளாறு காரணமாக உடனடியாக சென்னையில் தரையிறக்கப்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து அந்தமானுக்கு ஏர்இண்டியா விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு புறப்பட்டது. அதில், 117 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உட்பட 123 பேர் பயணித்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். தொடர்ந்து விமானத்தை இயக்கினால், ஆபத்து என உணர்ந்த விமானி, இதுபற்றி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அதிகாரிகள், விமானத்தை சென்னைக்கே திரும்பி வரும்படி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சென்னையில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதமாக செய்ய விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அதன்படி ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டன. இதையடுத்து ஏர்இண்டியா விமானம் சென்னை விமான நிலையத்தின் 2வது ஓடுபாதையில் காலை 9.40 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தில் பயணித்த 123 பேரும் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் அனைவரும் கீழே இறக்கப்பட்டு பயணிகள் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமான நிலைய பொறியாளர்கள் விமானத்தில் ஏறி, பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகளை மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

Related Stories: