பழநி அருகே பயங்கரம்; பஸ் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி: 15 பேர் படுகாயம்

பழநி: பழநி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து கோவைக்கு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செல்லபாண்டி (38), ஓட்டிச் சென்றார். கண்டக்டராக செல்லத்துரை (55) சென்றார். பஸ்சில் 30 பேர் பயணம் செய்தனர். உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், பழநியில் இருந்து 13 கிமீ தொலைவில் உள்ள தாழையூத்து அருகே பஸ் சென்று கொண்டிருந்தது.

அப்போது, கோவையில் செங்கல் லோடு இறக்கி விட்டு, பழநி நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் லாரி, எதிர்பாராதவிதமாக பஸ்சின் நடுப்பகுதியில் மோதியது. லாரி மோதியதில் பஸ்சின் நடுப்பகுதி நொறுங்கியது. லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் தூக்கி எறியப்பட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மணிகண்டபிரபு (30), உக்கிரபாண்டி (24) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர்.

மேலும், இவ்விபத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரும் முகம் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் இருந்த சுதாகர் (24), சிங்கம் (57), கருப்பையா (40), கருப்புச்சாமி (60), சரவணக்குமார் (22),  மணிவேல் (21), ராஜசேகர் (19) மற்றும் லாரி டிரைவர் ராஜேஷ் (30) உட்பட 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: