சிஎஸ்கே-பெங்களூரு இன்று மோதல்

சார்ஜா: ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் 35வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை 8 போட்டியில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று மீண்டும் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. 2வது கட்ட சீசனின் முதல் போட்டியில் மும்பையை வீழ்த்திய நம்பிக்கையில் உள்ளது. ருதுராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ், ரெய்னா, மொயீன் அலி, டோனி, ஜடேஜா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. ராயுடு காயம் காரணமாக உத்தப்பா இன்று களம் இறங்குவார்.

பெங்களூரு 8 போட்டியில் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் 92 ரன்னில் சுருண்டு தோல்வி அடைந்த நிலையில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் விராட் கோஹ்லி, டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் ஆகியோரை நம்பியே உள்ளது. பந்துவீச்சில் ஹர்ஷல் பட்டேல், கைல் ஜாமிசன், முகமது சிராஜ், சஹால் உள்ளனர். கோஹ்லி இன்று 66 ரன் எடுத்தால் டி.20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்னை எட்டும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் கிறிஸ்கெய்ல், பொல்லார்ட், சோயிப் மாலிக், வார்னர் ஆகியோர் இந்த இலக்கை எட்டி உள்ளனர்.

இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் 17ல் சென்னை, 9ல் பெங்களூரு வென்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டுள்ளது. கடைசியாக மோதிய 5 போட்டியில் 3ல் சென்னை வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனில் கடந்த ஏப்25ம் தேதி மோதிய போட்டியில் சென்னை 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>