டெங்கு பாதித்த பகுதியில் ஆய்வு வீடு, வீடாக டெங்கு கொசு புழு உற்பத்தி தடுக்க விழிப்புணர்வு-அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

ஆற்காடு : ஆற்காடு நகராட்சி 23வது வார்டு புதுத்தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த பெண் ஒருவர் ஆற்காடு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டில் கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த தெருவில் உள்ள வீடுகளில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தூய்மை பணிகளை பார்வையிட்டு வீட்டில் பயன்படுத்தப்படாத சில பொருட்களை வெளியில் வைக்கப்பட்டுள்ளதில்  மழைநீர் தேங்கி உள்ளதை கண்டறிந்து பணியாளர்கள் தங்கள் பணிகளை சரியாக செய்ய வேண்டும்.

ஒரு சிறிய தவறும் பெரிய பிரச்னையை உருவாக்கும் என்று ஒவ்வொரு பணியாளர்களுக்கும் உணர்ந்து பணியாற்றும் வகையில் கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணியை  அலுவலர்கள் ஆய்வு செய்து முறைப்படுத்தி, டெங்கு கொசு உற்பத்தி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து அங்கு வைக்கப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினார்.

 மேலும், அங்கன்வாடி மையத்தை சுத்தமாகவும் குழந்தைகளை சுகாதாரமாகவும் பார்த்துக்கொள்ளும் அங்கன்வாடிக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவப்படுத்தப்படும் என்றார்.

 இதைத்தொடர்ந்து மேல்விஷாரம் நகராட்சியில் 6வது வார்டு பஜனை கோயில் தெருவில் கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு வீடு வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தி குறித்து ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் கூறியதாவது,  பருவமழை தொடங்க இருப்பதால் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவும் காய்ச்சல் வேகமாக பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்வதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

ஏதேனும் பகுதியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் டெங்கு நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி கொசு ஒழிப்பு பணியை துரிதப்படுத்த வேண்டும். அனைத்து கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணி, தண்ணீரில் குளோரின் கலக்கும் பணி,  தரை மற்றும் மேல் நீர் தேக்க தொட்டிகளுக்கு குளோரின் மருந்துகள் தூவும் பணி ஆகியவை முறையாக நடைபெறுவதை ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  அப்போது ஆற்காடு நகராட்சி ஆணையர்கள் ஜெயராம ராஜா, திருமால் செல்வம், தாசில்தார்கள் கோபாலகிருஷ்ணன், ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.வாலாஜா: வாலாஜாவில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் கால்வாய்களில்  துப்புரவு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று முன்தினம் வாலாஜாவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இங்குள்ள 21வது வார்டு காந்திநகர் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் மற்றும் காலி இடங்களில் தேங்கியுள்ள கழிவுநீர் அகற்றுவதை பார்வையிட்டார். அப்போது வாலாஜா தாசில்தார் ஆனந்தன், நகராட்சி ஆணையாளர் மகேஷ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில், தூய்மை பணி நடந்து வருகிறது. கொசவன் கால்வாய், பேரூராட்சி பகுதி வழியாக செல்கிறது.  இந்த கால்வாயில் மண்டியுள்ள புதர்களை சீரமைப்பு பணிகள் நடந்தது. இப்பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன், நெமிலி தாசில்தார் ரவி, வருவாய் ஆய்வாளர் சுபலபிரியா, கிராம நிர்வாக அலுவலர் தேவி மற்றும் தூய்மை காவலர் மேற்பார்வையாளர் பன்னீர் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories:

>