கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

கோவை: கோவை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 19ஆம் தேதிகளில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. அவற்றில் சுமார் 2.5 லட்சம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த சுமார் 24.5 லட்சம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்திற்கு பிரத்யேகமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் கீழ்கண்ட நெறிமுறைகளுடன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக், மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருக்க வேண்டும்.

மேலும், வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தவும் மேற்படி கடை மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுவதை மேற்படி நிறுவனம், கடைகளின் உரிமையாளர்கள் உறுதிபடுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: