ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கு தமிழகத்தில் ஆட்சி மாறியிருப்பதால் எனக்கு உரிய நியாயம் கிடைக்கும்: உச்ச நீதிமன்றத்தில் பெண் அதிகாரி மனு

புதுடெல்லி: ‘ஜ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம்,’ என, உச்ச நீதிமன்றத்தில் பெண் போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் எஸ்பி.யை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐ.ஜி. முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம், தமிழக காவல் துறையில் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க, கடந்த அதிமுக ஆட்சியில் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் 5 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டது. மேலும், இந்த குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை தெலுங்கானா போலீசாருக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஐஜி முருகனும், அப்போதைய அதிமுக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தாக்கல் செய்த இடைக்கால மனுவில், ‘இந்த விசாரணையை வெளிமாநில போலீஸ் அதிகாரிகள்தான் நடத்த வேண்டும். அப்போதுதான், உண்மை வெளியாகும்,’ என்று கூறினார். அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 2019, செப்டம்பர் 24ம் தேதி இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, எச்.ராய் அமர்வில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திலேயே வழக்கை விசாரிக்கலாம். அதில், கண்டிப்பாக உரிய நியாயம் கிடைக்கும். இதே கோரிக்கை அடங்கிய பிரமாணப் பத்திரத்தை பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனால், இந்த வழக்கில் எந்தவித எதிர்ப்பும் தற்போது இல்லாததால், இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: