ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை : கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை சேர்ந்தவர் குமார் (49). திருப்பூர் ராமு காலனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (51). இருவரும் திண்டுக்கல் வேடசந்தூர் அருகே ஈமு கோழி பார்ம்ஸ் நடத்தி ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை முதலீடு செய்தால் 6 முதல் 20 ஈமு கோழிகள் வழங்கப்படும். கொட்டகை அமைத்து, தீவனங்கள் வழங்கப்படும். மாதம் ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரமும், ஆண்டு போனசாக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரையிலும் தரப்படும் என தெரிவித்தனர்.

 இதை நம்பி பல்வேறு பகுதியை சேர்ந்த 16 பேர் ரூ. 23.83 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால் இவர்கள் இருவரும் உரிய முறையில் பணத்தை தரவில்லை. இது தொடர்பாக கடந்த 2012ல் புகாரின் பேரில் இவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவானது. இவர்கள் 25 பேரிடம் ரூ. 58.51 லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை டான்பிட் நீதிமன்ற நீதிபதி ரவி விசாரித்து 2 பேருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.82.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories: