போக்சோ குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள்: மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்

தஞ்சை: போக்சோ குற்றவாளிகள் குறித்த சரித்திர பதிவேடு எடுக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதன் வாயிலாக குற்றங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை மற்றும் செட் இந்தியா ஆகியவை சார்பில் குழந்தைகள் நேய காவல் அறை மற்றும் விளையாட்டு திடல் திறப்பு விழா நடந்தது. இவற்றை திறந்து வைத்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேசியதாவது: அனைத்து அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இதுபோன்ற குழந்தைகள் நேய காவல் அறை தேவை. தமிழகத்திலேயே முதன்முறையாக தற்போது தஞ்சை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் குழந்தைகள் நேய காவல் அறை திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை இன்றியமையாத ஒன்றாகும். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமானது. காவல்துறை குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது அனைவரின் கடமையும் ஆகும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதேபோன்று மகளிர் காவல் நிலையங்களில் தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் தீர்க்கப்படுகிறது. இதை குடும்ப விழாவாக நடத்தப்படுகிறது. கிராமங்கள் மற்றும் கல்லூரிகள் அளவில் சைபர் கிரைமை தடுக்க காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போக்சோ குற்றம் போன்றவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக போக்சோ குற்றவாளிகள் குறித்து சரித்திர பதிவேடு எடுக்கப்பட்டு. அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். இதன்வாயிலாக தொடர்ந்து குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார், எஸ்.பி. ரவளிபிரியா, ஐஜேஎம் தலைவர் பிரீத்தி டேனியல் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக செட் இந்தியா இயக்குனர் பாத்திமா ராஜ் வரவேற்றார். தஞ்சாவூர் ஏஎஸ்பி., ரவீந்திரன் நன்றி கூறினார். இந்த குழந்தைகள் நேய காவல் அறையில் கேரம் போர்டு, செஸ் போர்டு, புத்தகங்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: