உத்தமபாளையம் அருகே சாலையில் ஆக்கிரமிப்பால் பஸ் போக்குவரத்து நிறுத்தம்: தாசில்தாரிடம் முறையிட மக்கள் முடிவு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே, சாலை ஆக்கிரமிப்பால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தாசில்தார் அலுவலகத்தில் பொதுமக்கள் இன்று முறையிட முடிவு செய்துள்ளனர். உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமசாமிநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம், ஊராட்சி நிர்வாகம் முல்லையாற்றில் தொட்டி கட்டும் பணியை தொடங்கியது. ஆனால், பொதுப்பணித்துறையினர் இப்பணியை நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக ராமசாமிநாயக்கன்பட்டி, பரமத்தேவன்பட்டி, முத்துலாபுரம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. கடந்த மாதம் உத்தமபாளையத்தில் இருந்து ராமசாமிநாயக்கன்பட்டி, முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், எரசை, அண்ணாநகர் வழியே புதிய வழித்தடத்தில் ஒரு நாள் மட்டும் அரசு பஸ் இயக்கப்பட்டு, பின்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு காரணம் மெயின் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பால் பஸ்கள் செல்ல முடியவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து கிராம மக்கள் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் மாணவ, மாணவியர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 5 கி.மீ தூரம் நடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வலியுறுத்தியும், மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்கக்கோரியும், ராமசாமிநாயக்கன்பட்டி கிராம மக்கள் இன்று காலை தாசில்தார் அலுவலகத்தில் முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஊராடசி தலைவர் பவுன்ராஜிடம் கேட்டபோது, ‘குடிநீர் தொட்டி கட்டுவதற்கு பொதுப்பணித்துறையின் முட்டுகட்டை போடுகின்றனர். சாலையில் ஆக்கிரமிப்பால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்து வருகிறேன்’ என்றார்.

Related Stories: