திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ரோவர் கருவி மூலம் கோயில் நிலம் அளவீடு செய்யும் பணி தொடக்கம்

திருப்போரூர்: தமிழகத்திலேயே முதல்முறையாக திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலங்கள் டிஜிட்டல் முறையில் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதாகவும், முறைகேடாக தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சேஷாத்திரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆளவந்தார் அறக்கட்டளை மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து திருப்போரூர் சார்பதிவாளருக்கு உத்தரவிட்டது.

மேலும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான மாமல்லபுரம், பட்டிபுலம், சாலவான்குப்பம், நெம்மேலி, சூளேரிக்காடு, கிருஷ்ணன்காரணை, கோவளம் ஆகிய கிராமங்களில் உள்ள 1200 ஏக்கர் நிலங்களையும், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான திருப்போரூர், தண்டலம், சந்தனாம்பட்டு, செங்காடு, பஞ்சந்தீர்த்தி, கருங்குழிப்பள்ளம், மடையத்தூர், காட்டூர், பூண்டி, கீழூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 570 ஏக்கர் நிலங்களையும் அளவீடு செய்து, அவை யார் பெயரில் பட்டா உள்ளது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா, முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு உள்ளதா என கண்டுபிடித்து அறிக்கை அளிக்குமாறு செங்கல்பட்டு கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, கடந்த மே மாதம் மாமல்லபுரம் ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களையும், திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிலங்களையும் அளவீடு செய்யும் பணி நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்து அறநிலையத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்களை துல்லியமாக அளவீடு செய்யும் ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி கந்தசுவாமி கோயில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் வெற்றிவேல் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் முதற்கட்டமாக 50 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டன. விரைவில் 570 ஏக்கர் நிலங்களும் டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யப்பட்டு, அறநிலையத்துறை இணைய தளத்தில் பதிவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: