பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது

ஈரோடு: பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தையில் வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாநகரில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்கிழமை இரவு வரை ஜவுளிச்சந்தை நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக கடந்த 6 மாதமாக ஜவுளிச்சந்தைக்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் அனுமதி அளிக்கவில்லை. இதனால், வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் தினசரி கடைகளை மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால், வியாபாரிகள் மொத்த விற்பனையை ஆர்டர் பெற்று லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனா். இருப்பினும், வாரச்சந்தை நடக்கும் நாட்களில் தினசரி சந்தைகளில் சில்லரை விற்பனை வியாபாரிகளுக்கு ஓரளவு கை கொடுத்து வந்தது. இந்நிலையில், வாரச்சந்தை தினமான நேற்று வழக்கம்போல் தினசரி சந்தை கடைகள் செயல்பட்டது. ஆனால், ஓணம், ஆடி மாதம் பண்டிகை சீசன் முடிவடைந்ததால், நேற்று கூடிய சந்தையில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் வருகை இல்லாததால் ஜவுளி சந்தை வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து ஜவுளிச்சந்தை வியாபாரிகள் கூறியதாவது: பண்டிகை சீசன் இல்லாததால் இன்று கூடிய சந்தையில் ஜவுளி விற்பனை மந்தமாக காணப்பட்டது. அக்., மாதம் தீபாவளி பண்டிகை உள்ளதால், அதற்கான புதிய ஜவுளிகளை கொள்முதல் செய்வதிலும், உற்பத்தி செய்வதிலும் வியாபாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இனி வரக்கூடிய வாரங்களில் ஜவுளி சந்தை கடைகளுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே தமிழகத்தை சேர்ந்த மொத்த வியாபாரிகளும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வர துவங்குவர்.

 இதன் மூலம் ஜவுளி விற்பனை சூடுபிடிக்கும். எனவே, தீபாவளி சீசனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் வாரந்திர ஜவுளி சந்தை நடத்திட அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: