யு.எஸ்.ஓபன் ஆடவர் ஒற்றையர் பைனல்: டேனில் மெட்வடேவ் சாம்பியன்..! ஜோகோவிச்சை வீழ்த்தி அசத்தல்

நியூயார்க்: யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பைனலில் நோவக் ஜோகோவிச்சை நேர் செட்களில் வீழ்த்தி, டேனில் மெட்வடேவ் கோப்பையை கைப்பற்றினார். இந்திய நேரப்படி நியூயார்க்கில் இன்று அதிகாலை ஆர்தர் ஆஷே ஸ்டேடியத்தில் நடந்த பைனலில் ஏடிபி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியாவின் டென்னிஸ் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச்சும், 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும் மோதினர். இந்த காலண்டர் வருடத்தில் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் என 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் கோப்பையை கைப்பற்றிய ஜோகோவிச், யு.எஸ்.ஓபனிலும் கோப்பையை கைப்பற்றி சாதனை படைக்க வேண்டும் என்ற இலக்குடன் மெட்வடேவை எதிர்கொண்டார்.

தவிர கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் மற்றும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகிய 3 பேரும் தலா 20 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர். இதனால் இந்த கோப்பையை ஜோகோவிச் வென்றால், அந்த பட்டியலிலும் முதலிடத்தை பிடித்து, மற்றுமொரு புதிய சாதனையை எட்டும் வாய்ப்பு அவருக்கு இருந்தது.  25 வயதேயான மெட்வடேவ், இதுவரை கிராண்ட்ஸ்லாமில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றியதில்லை. இதனால் அவர் தனது முதலாவது கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆட்டத்தை துவக்கினார். நடப்பு யு.எஸ்.ஓபனில் ஜப்பானின் கீ நிஷிகோரி, தரவரிசையில் 6ம் இடத்தில் உள்ள இத்தாலியின் மேட்டியோ பெரட்டினி மற்றும் 4ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் என முன்னணி வீரர்கள் அனைவரையும் வென்று ஜோகோவிச் பைனலுக்கு முன்னேறினார்.

இப்போட்டிகளில் எல்லோரிடமும் முதல் செட்டை இழந்து, அடுத்தடுத்து 3 செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளார். அதனால் பைனலிலும் மெட்வடேவிடம் அவர் முதல் செட்டை 4-6 என இழந்தபோது, அவரது ரசிகர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. வழக்கம் போல் அடுத்தடுத்து 3 செட்களை கைப்பற்றி வெற்றி பெறுவார் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க, மெட்வடேவ் அதற்கான வாய்ப்புகளை கொடுக்கவே இல்லை. 6-4, 6-4, 6-4 என நேர் செட்களில் எளிதாக ஜோகோவிச்சை வீழ்த்தி, யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாமில் சாம்பியனாக முடிசூட்டிக் கொண்டுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மெட்வடேவுக்கு இது முதல் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர்  2019ம் ஆண்டு யு.எஸ்.ஓபன் பைனலுக்கு முன்னேறிய மெட்வடேவ், ரஃபேல் நடாலிடம் தோல்வியடைந்தார்.

இந்த ஆஸி.ஓபன் பட்டத்தை ஜோகோவிச்சிடம் பறி கொடுத்தார். இம்முறை ஜோகோவிச்சை வீழ்த்தி, அந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டார். ஜோகோவிச் கூறுகையில், ‘‘இன்று இந்த கோப்பை, மெட்வடேவுக்கே உரியது. மிகச் சிறப்பாக ஆடினார். தோல்வியடைந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். போட்டியை காண வந்திருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். அவர்கள் என்னுடைய ஆன்மாவுடன் கலந்துவிட்டனர். ரசிகர்கள் என்னை நெக்குருக வைத்துவிட்டனர். இந்த ரசிகர்களை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது. அவர்களுக்கு எனது நன்றி’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Related Stories: