சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரம்பாடி டேன் டீ (அரசு தேயிலைத்தோட்டம்)  பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்பை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.   நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் யானைகள்  விரும்பி உண்ணும் உணவுகள் கிடைக்காததால் விளை நிலங்களில் புகுந்து வாழை,தென்னை,பாக்கு, பலா உள்ளிட்ட  விவசாய பயிர்களை தின்றும் சேதம் செய்தும் வருகின்றன. குடியிருப்புகளை உடைத்து உணவு தேடி வருகின்றன. ருசி கண்ட யானைகள் மீண்டும் மீண்டும் மக்கள்  குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்களில் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேரம்பாடி வனச்சரகம் டேன்டீ 4 பகுதியில்  தொழிலாளர்கள் குடியிருப்பில்  நேற்று நுழைந்த 2 காட்டு யானைகள் பிரபு சுப்பிரமணியம், மருதமுத்து, பேச்சாய் ஆகியோரின் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தியது. இதையடுத்து தொழிலாளர்கள் யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.

சம்பவம் குறித்து  சேரங்கோடு ஊராட்சி முன்னால் கவுன்சிலர் வடிவேலு கூறுகையில், டேன் டீ  பகுதியில் சில இடங்களை  வனப்பகுதியாக அறிவித்து அது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அப்பகுதி முழுதும்   முற்புதர்கள் சூழ்ந்து காடுகளாக மாறிவிட்டதால் யானைகள் அப்பகுயில் முகாமிட்டு தொழிலாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தி வருகிறது. எனவே, அரசு மற்றும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் அகழி மற்றும் மின்வேலிகள் அமைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், என்றார்.

Related Stories: