பூந்தமல்லி கிளை சிறையில் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காவலர்: போலீசார் விசாரணை

பூந்தமல்லி: பாதுகாக்கப்பட்ட பகுதியான பூந்தமல்லி கிளை சிறையில் ஏன் செல்போனில் பேசுகிறாய் என்று கேள்வி கேட்ட இன்ஸ்பெக்டரை, நெற்றிபொட்டில் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன் என்று காவலர் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் தனி கிளைச்சிறை உள்ளது. இங்கு, என்.ஐ.ஏ. வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மிகவும் பாதுகாப்பு வாய்ந்த இந்த கிளை சிறையை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த கோவிந்தன் என்ற காவலர், தனது செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயர், காவலர் கோவிந்தனை அழைத்து, பணி நேரத்தில் ஏன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய். இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் மிகுந்த கவனத்துடன் பணிபுரியாமல், இப்படி செய்யலாமா என கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சக காவலர்கள் ஓடிவந்து அவர்களை தடுத்தும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர் கோவிந்தன், திடீரென இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து, சுட்டு விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. சக போலீசார், அவரை தடுத்து அழைத்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுரேந்தர் நாயர் பூந்தமல்லி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காவலர் கோவிந்தன் மன அழுத்தத்தில் உள்ளாரா, பணிச்சுமை காரணமாக அப்படி நடந்து கொண்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: