பேக்அப்பில் உள்ள தகவல்களை இனி 3ம் நபரால் பார்க்க முடியாது: வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு நிம்மதி: என்ட் டூ என்ட் தொழில்நுட்பத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி: உலகம் முழுவதும் பல நூறு கோடி மக்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பகிரப்படும் தகவல்களை, தகவல் அனுப்புவரும், அதை பெறுபவரும் மட்டுமே படிக்க முடியும். இதற்காக, ‘என்ட் டூ என்ட்’ என்ற பாதுகாப்பு குறியீடு தொழில்நுட்பத்தை  வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது.  இருப்பினும், வாட்ஸ்அப்பின் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பத்திலும் மிகப்பெரிய குறை இருக்கிறது. வாட்ஸ்அப்பில் பரிமாற்றம் செய்யப்படும் தகவல்கள், கூகுள் டிரைவ் அல்லது ஆப்பிள் ஐகுளோவுட் ஆகியவற்றில் ‘பேக்அப்’ முறையில்  சேமிக்கப்படுகிறது.  இதில், ‘என்ட் டூ என்ட்’ பாதுகாப்பு அம்சம் பயன்படுத்தப்படவில்லை. எனவே, மூன்றாம் நபர்கள் பயனாளியின் செல்போனில் திருட்டுத் தனமாக பயன்படுத்தியோ அல்லது ஹேக்கர்கள் மூலமாகவோ, பேக்அப்பில் உள்ள இந்த தகவல்களை எளிதாக பெற முடியும்.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் மக்களுக்கு இது மிகப்பெரிய ஒரு கவலையாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த குறையை நீக்குவதற்கான புதிய பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது. இனிமேல், பேக்அப்பில் சேமிக்கப்படும் தகவல்களும் ‘என்ட் டூ என்ட்’ பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் பாதுகாக்கப்பட உள்ளது. இதற்காக, ’ஹார்டுவேர் பாதுகாப்பு பெட்டகம்’ (எச்எம்எஸ்) தொகுப்பை அது உருவாக்கி இருக்கிறது. வாட்ஸ்அப்பில் பகிரப்படும் தகவல்கள், இனிமேல் இதில் தான் பாதுகாக்கப்படும். இதில் இருந்து பழைய தகவல்களை பெற விரும்பும் பயனாளிகள், 2 வெவ்வேறு முறைகளை பயன்படுத்தலாம்.

* பேக்-அப் தகவல்களை பெற வாட்ஸ்அப் வழங்கும் 64 எண்கள் கொண்ட பாஸ்வேர்டை பயன்படுத்தலாம்.

* தங்களின் தனிப்பட்ட ரகசிய குறியீடுகளை பயன்படுத்தலாம்.  

* இந்த ரகசிய குறியீடுகள் அல்லது எண்கள், எச்எம்எஸ்.சில் பாதுகாக்கப்படும்.

* இந்த ரகசிய குறியீடுகளின் மூலம் தகவல் அனுப்பினால்,   பயனாளியின் செல்போன் எண்ணை வாட்ஸ்அப் ஆய்வு செய்யும்.

* அது, சரியான எண்தான் என்று உறுதியானால் மட்டுமே, பேக்அப்பில் உள்ள தகவல்களை அணுக முடியும்.

Related Stories: