நெல்லை - தென்காசி இடையே நான்கு வழிச்சாலை பணி; சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு: வாகன ஓட்டிகள், பயணிகள் திண்டாட்டம்

நெல்லை: நான்கு வழிச்சாலை பணிகள் காரணமாக நெல்லை- தென்காசி இடையே சாலை போக்குவரத்து கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. பாசஞ்சர் ரயில் இயக்கமும் ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா 2ம் கட்ட அலைக்கு பிறகு பொது போக்குவரத்து ஓரளவுக்கு சீரடைந்துவிட்டாலும், நெல்லை- தென்காசி இடையே இன்னமும் வாகன ஓட்டிகள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்தாண்டு நெல்லை- தென்காசி இடையேயான நான்கு வழிச்சாலை பணிகள் ரூ.430.71 கோடிகள் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டன. கொரோனாவால் சிறிது காலம் தொய்வடைந்த இப்பணிகள் தற்போது மீண்டும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 2 மாவட்டங்களை மட்டுமல்லாது, தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாக நெல்லை- தென்காசி சாலை  காணப்படுகிறது. இச்சாலையானது சரக்கு போக்குவரத்து, சுற்றுலா பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள் என எப்போதும் நெருக்கடி நிறைந்த சாலையாகும்.

இரு வழிச்சாலையை அகலப்படுத்தி தற்போது 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. தார் சாலையின் இருபுறமும் ஒரே நேரத்தில் பள்ளம் தோண்டி சாலை பணிகள் நடப்பதால், அகலம் குறைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களில் சாலைகளின் இருபுறமும் பணிகள் நடக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் பள்ளங்களில் விழுந்து எழுந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. எனவே பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி இந்த சாலையை தவிர்த்து கடையம், பொட்டல்புதூர் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆலங்குளம் சுற்றுவட்டார கிராமங்களுக்கும், பாவூர்சத்திரம் பகுதிகளுக்கும் செல்வோர் நெல்லை- முக்கூடல் பாதையை தேர்ந்தெடுக்க தொடங்கியுள்ளனர். நெல்லை- தென்காசி சாலையில் இயக்கப்படும் பஸ்களும் சாலை பணிகள் காரணமாக ஏறி, இறங்கி, கடும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகின்றன. பயண நேரமும் தற்போது அதிகரித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, நெல்லை- தென்காசி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் இல்லாததும் பயணிகளை பெரிதும் பாதித்து வருகிறது.

நெல்லையில் இருந்து அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி வழியாக கேரளாவுக்கு செல்லும் மிக முக்கிய ரயில் வழித்தடம் உள்ளது. இதில் நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படும் பாலருவி ரயிலை தவிர பயணிகள் ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் மாதாந்திர சலுகை அட்டையுடன் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள், வியாபாரிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். நெல்லை- செங்கோட்டை வழித்தடத்தில் பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தும் தெற்கு ரயில்வே கண்டுகொள்ளவில்லை.

குறைந்தபட்சம் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலை பணிகள் நிறைவுபெறும் வரையிலாவது, இந்த வழித்தடத்தில் பகல் நேர ரயில்களை இயக்கினால் கடும் கூட்டம் அலைமோதும் என்பது பயணிகளின் கருத்தாக உள்ளது. நெல்லை- தென்காசி பேருந்துகளில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு நெருக்கடியுடன் பயணிக்க வேண்டியதுள்ளதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related Stories: