‘பொருநை’ நாகரிகம் தமிழ் பண்பாட்டின் ‘தொட்டில்’...தொன்மைமிக்க அடையாள சின்னங்கள் நெல்லை அருங்காட்சியகத்தில் இடம்பெற வாய்ப்பு

நெல்லை: தமிழகத்தில் தொன்மைமிக்க பொருநை நாகரிகத்தின் அடையாள சின்னங்கள், நெல்லை மாநகரில் அமைக்கப்பட உள்ள ரூ.15 கோடி மதிப்பிலான அருங்காட்சியகத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. நெல்லை மாநகரில் ரூ.15 கோடி ரூபாய்  மதிப்பில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக  முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்கு நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட  மக்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.  பழம்பெருமையும், தொன்மையும் வாய்ந்த தமிழ் நிலத்தில் பொருநை நாகரிகத்திற்கு என தனி மதிப்புண்டு. மூதாதையர்கள் விட்டுச் சென்ற அடையாளங்கள், தொல்பொருட்களை கொண்டு பொருநை நாகரிகத்தின் புகழை பறைசாற்ற முடியும்.

‘‘பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை’’ என கம்பரால் போற்றி புகழப்படும் ‘‘பொருநை’ என்னும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம், பொதிகை மலையில் உற்பத்தியாகி 130 கிமீ. தூரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. இந்நதிக்கரையோரத்து நாகரிகம் தமிழ் பண்பாட்டின் ‘‘தொட்டில்’ எனலாம். பொருநை ஆற்றங்கரையில் கொற்கை, ஆதிச்சநல்லூர், சிவகளை என தொன்மை சிறப்பு மிக்க பல ஊர்கள் காணப்படுகின்றன. இதில் கொற்கை இடைச்சங்க காலத்தில் பாண்டியர்களின் தலைநகராகவும், துறைமுகமாகவும் விளங்கியது. கொற்கை கடலில் பாண்டியர்கள் முத்துக்குளித்தலை தொடர்ந்து நடத்தி வந்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். பண்டைய தமிழர்களுக்கு கொற்கை மிகப்பெரிய வணிகத்தலமாகவும் விளங்கியது.  

தற்போது கொற்கையில் நடந்து வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கை சமவெளியை சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இதை வைத்து கொற்கை துறைமுகத்தில் 6ம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடன் வணிக தொடர்பு இருந்தது உறுதியாகிஉள்ளது. நெல்லையில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் பரம்பு மலையானது பொருநை ஆற்றின் தென்கரையில் தெற்கு வடக்காக நீண்டு காணப்படுகிறது. 1876ம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பரம்பில் ஜாகோர் என்னும் ஜெர்மானியர் ஆராய்ச்சி நடத்தி, அங்கு கிடைத்த அரிய தொல்பொருட்களை பெர்லின் அருங்காட்சியகத்தில் கொண்டு போய் சேர்த்தார்.

1903-04ம் ஆண்டுகளில் அலெக்சாண்டர் என்பவர் நடத்திய ஆய்வில் ஆதிச்சநல்லூரில் மண்ணால் ஆன மண்பாண்டங்கள், அதிக அளவில் எலும்புகள், மண்டையோடுகள், இரும்பு ஆயுதங்களும் சிக்கின. ஆதிச்சநல்லூரில் ஈமத்தாழிகளை புதைப்பதற்கு என பாறைகளில் தனித்தனியாக உட்குடைவுகள் உள்ளன. வரலாற்று காலத்திற்கு முந்தைய ஈமக்காடு பகுதிகளில் ஆதிச்சநல்லூர்தான் பரந்தது என வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆதிச்சநல்லூரில் நடந்த ஆய்வுகளை கொண்டு தொல்பொருட்களை கணக்கிட்டால், ெபாருநை ஆற்றங்கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாடு இருப்பதும், கப்பல் கட்டுதல், கடல் வணிகம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் தமிழர்கள் தலைசிறந்து விளங்கியதும் தெரிகிறது.

எறிவேல், ஈட்டி, குத்துவாள், கை கோடாரி, வாள், கூம்புவாய் ஈட்டி உள்ளிட்ட பொருட்களை அன்றைய பொருநை நாகரிகத்தில் பயன்படுத்தியதையும் அறியலாம். ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரை 847 தொல்பொருட்களும், பழங்கால மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன.  தூத்துக்குடியில் இருந்து 31 கிமீ தொலைவில் உள்ள சிவகளை பகுதியானது ெதால்பொருள் ஆராய்ச்சிக்கான மற்றொரு முக்கிய இடமாகும். ெபாருநை ஆற்றின் வடக்கு கரையில் உள்ள காணப்படும் சிவகளையில் முதற்கட்ட அகழாய்வில் ஆதன் என்னும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை கிடைத்தது. இங்கு கிடைக்கப்பெற்ற வண்ண கலயங்கள், குடுவைகள் ஆகியவை நல்ல வேலைப்பாடுகளை கொண்டதாகும். சிவகளை பரம்பு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் உமி நீங்கிய நெல்மணிகள், அமெரிக்காவில் உள்ள மியாமி நகர ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் உமி நீங்கிய நெல்மணிகளின் காலம் கி.மு. 1150 என தெரிய வருகிறது. இதை கொண்டே பொருநை நாகரிகம் எவ்வளவு பழமையானது என்பதை தெரிந்து கொள்ளலாம். பொருநை நாகரிகத்தின் ஆற்றங்கரைகளில் கிடைத்த தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப்பட்டைகள், தாமிரத்தால் ஆன பெண் உருவங்கள். வெண்கல பாத்திரம், இரும்பு ஆயுதம், சிகப்பு, கருப்புநிற பானைகள், கிண்ணங்கள், அரிய கல்மணிகள், எலும்பு மணிகள், தந்தத்தினால் செய்யப்பட்ட மணி, செம்பு, இரும்பு மோதிரம், வட்ட சில்லுகள், வளையல் துண்டுகள், அரவை கற்கள் போன்றவை நெல்லையில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்தில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன.  

இப்ெபாருட்களை மக்கள் பார்வைக்காக ஆவணப்படுத்தும்போது பொருநை அருங்காட்சியகம் புகழ்பெறும். மேலும் இதில் 3 ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த பல அபூர்வ பொருட்கள் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு தெரிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. புதிய அருங்காட்சியகம் அமைவதன் மூலம் வருங்கால இளைய தலைமுறையினர், முந்தைய தமிழரின் வாழக்கை முறையை குறிப்பாக பொருநை நதிக்கரை பகுதி மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள முடியும். வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

‘பொதிய மலை பெற்றெடுத்த பொற்கொடி’

தாமிரபரணி ஆறானது தன்பொருநை என்று பெரிய புராணத்தாலும், ‘‘தன்பொருநல்’’, ‘‘வன்பொருநல்’’ என்று திருவாய்மொழியாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘பொதியமலைப் பெற்றெடுத்த பொற்கொடி’’ என்று திருவிளையாடற் புராணம் விளக்குவது சிறப்பிற்குரியது. தாமிரபரணி ஆற்றின் பண்டை காலத்தின் பெயர் தான் ‘‘தன்பொருநை’. பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி பாணதீர்த்தம், கல்யாண தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை கடந்து பாபநாசத்தின் வழியாக வரும் தாமிரபரணி நெல்லை, சீவலப்பேரி, ஏரல், ஆத்தூர் வழியாக புன்னக்காயல் கடலில் கலக்கிறது.

வற்றாத ஜீவநதி என்ற பெருமை பொருநை நதியான தாமிரபரணிக்கு உண்டு. தமிழகத்தில் உற்பத்தியாகி தமிழகத்திலேயே கடலில் கலக்கும் தட்சிண கங்கை என்ற சிறப்பை பெற்றது தாமிரபரணி. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் தாமிரபரணி ஆறு நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் தாகத்தை தீர்க்கும் புண்ணிய நதியாக திகழ்கிறது.  இதன் வரலாறும், தோற்றமும் 3 ஆயிரத்து 200 ஆண்டு

கள் பழமையானது.

Related Stories: