நடிகர் விவேக் மரணம் முக்கிய முன்னுதாரணம் தடுப்பூசி போடும் முன்பாக அனைவருக்கும் பரிசோதனை: தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீர் மாரடைப்பால் இறந்தார். இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாகதான் அவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, மக்களுக்கிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். ஆனால், மறுநாள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஏப்ரல் 17ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இது தொடர்பாக, விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதால்தான் இறந்தார். அவருக்கு முன்னதாக முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்படாததும் அதற்கு முக்கிய காரணமாகும். இது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

இதை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பாக, அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்ய வேண்டும். எதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது அப்போது தான் தெளிவாக தெரிய வரும். இதற்கு நடிகர் விவேக் மரணம் ஒரு முக்கிய உதாரணமாக உள்ளது. மேலும், மனுதாரரின் இந்த கோரிக்கை குறித்து 8 வாரத்துக்குள் ஒன்றிய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என உத்தரவிட்ட ஆணையம், வழக்கையும் முடித்து வைத்தது.

மீண்டும் சரிவை நோக்கி பாதிப்பு

* கடந்த 24 மணி நேரத்தில் 260 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி 4 லட்சத்து 42 ஆயிரத்து 9.

* 72.37 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* தினசரி பாதிப்பு குறைவதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 4 லட்சத்துக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போது 3 லட்சத்து 90 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 74 ஆயிரத்து 954.

Related Stories: