பழவேற்காடு பகுதியில் துறைமுகம் அமைக்கப்படாது முதல்வரின் அறிவிப்புக்கு மீனவ பெண்கள் நன்றி

சென்னை: பழவேற்காடு பகுதியில் அதானிக்கு சொந்தமான துறைமுகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதிகளில் கிடைக்கக் கூடிய நண்டு, மீன், இறால் போன்றவற்றை காண்பித்து இவற்றை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் பழவேற்காடு மீனவ கிராமத்தை சேர்ந்த விஜயலட்சுமி, வீரம்மாள் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: மிகப் புகழ் பெற்ற மீன் வளங்கள் அதிகம் கொண்ட பகுதி பழவேற்காடு இங்கு இயற்கை சூழ்ந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது. இந்த பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு அதிக சுவையும் தனிச்சிறப்பு உள்ளது. மேலும் மருத்துவ குணம் கொண்ட அரிய வகை மீன்கள், இறால், நண்டு போன்றவை பழவேற்காடு பகுதியில் கிடைக்கிறது. இங்குள்ள மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித் தொழில் ஆகும்.

அதானி குழுமத்தைச் சார்ந்தவர்கள் இங்கு தங்கும் விடுதிகள் அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும் 2000 மீட்டர் அளவிற்கு கடலினுள் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டசபையில் இப்பகுதியில் துறைமுகம் அமைக்கப்படமாட்டாது என்று முதல்வர் கூறியுள்ளார். அதற்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வரும் அக்டோபர் 16ம் தேதி நடைபெறும் எங்களுடைய பாரம்பரிய தமிழ் மீன் உணவு திருவிழாவிற்கு தமிழக முதல்வர் நேரில் வருகை தந்து பாரம்பரிய தமிழ் மீன் வகை உணவுகளை சாப்பிட வேண்டும் என அழைக்கின்றோம். பழவேற்காடு பகுதிக்கு நேரில் வந்து இத்திருவிழாவில் கலந்து கொண்டு இந்த பகுதியை மிகச்சிறந்த சுற்றுலா பகுதியாக தரம் உயர்த்துவதற்கு தேவையான அறிவிப்புகளை முதல்வர் அறிவிக்க வேண்டும். மேலும் துறைமுகத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: