அவசர காலங்களில் பயன்படுத்தும் வியூகம் ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் போர் விமானத்தை இறக்கி அசத்தல்: புதுச்சேரி உட்பட மேலும் 20 இடங்களில் அமைக்க முடிவு

ஜெய்ப்பூர்: அவசர காலங்களில் பயன்படுத்தும் நோக்கத்தில் ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நேற்று வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டன. போர், இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் விமானப்படை விமானங்கள், போர் விமானங்களை இறக்கவும், பறக்கவும் தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் தாக்குதல் அல்லது இயற்கை பேரிடர்களால் விமானப்படை தளங்கள் சேதமடையும் பட்சத்தில், தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தவே இந்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ல், உத்தர பிரதேசத்தில் இம்மாநில அரசுக்கு சொந்தமான பசுமை நெடுஞ்சாலையில் விமானத்தை இறக்கி முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், பார்மரில் உள்ள சட்டா - காந்தவ் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்களை தரையிறங்கும் வகையில் 3 கிமீ தூரத்துக்கு விமான ஓடுதள தரத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் விமானப்படையின் ஹர்குலஸ் விமானம் நேற்று முதன்முறையாக தரையிறங்கியது.

இதில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ராணுவ தலைமை தளபதி பிபின், விமானப்படை தளபதி பதவுரியா உள்ளிட்டோர் பயணம் செய்தனர். இதை தொடர்ந்து, விமானப்படையின் சுகோய் போர் விமானம், ராணுவ ஹெலிகாப்டர்கள் தரையிறங்கின. இந்த வசதியை துவக்கி வைத்து பேசிய ராஜ்நாத் சிங், ‘‘பார்மரை போல் தேசிய நெடுஞ்சாலைகளில் விமானப்படை விமானங்கள் அவசரமாக தரையிறங்கும் வசதி, புதுச்சேரி கடற்கரை சாலை உட்பட நாடு முழுவதும் 20 இடங்களில் விரைவில் ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.

* இனிமேல் 15 நாளில் அமைத்து வருகிறேன்

ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில், ‘‘பார்மர் தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் தரையிறங்குவதற்கான ஓடுதளத்தை அமைக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது. இனிமேல், ராணுவ விமானங்களை அவசரமாக தரையிறக்கும் வசதி, தேசிய நெடுஞ்சாலைகளில் 15 நாட்களில் ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதியளிக்கிறேன். எனக்கு தெரிந்து பார்மரை சுற்றி 350 கிமீ தூரத்துக்கு விமான நிலையம் இல்லை. எனவே, விமானப்படை மூலம் இங்கு சிறிய விமான நிலையம்  அமைக்கலாம். அதற்கான நிலத்தை வழங்க தயாராக இருக்கிறோம். இதனால், உள்ளூர் மக்கள் பயன் பெறுவார்கள்,’’ என்றார்.

Related Stories: