ஆந்திராவில் கனமழை எதிரொலி வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் 13 ஏரிகள் நிரம்பியது: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்:  தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் ஆந்திர மாநில வனப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ‘கலவகுண்டா அணை’ முழுமையாக நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த மழையால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 13 ஏரிகள் நிரம்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் பெரிய ஏரி, கொடைக்கல் உள்ளிட்ட 9 ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து, பொன்னையாற்று நீரை ஏரிகளுக்கு திருப்பி விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதோடு, பொன்னையாற்றில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அணையின் தடுப்பணை சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. தற்போது சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், தண்ணீர் கிழக்கு, மேற்கு பிரதான கால்வாயில் வெளியேற்றப்படுகிறது.வேலூர் மாவட்டம் நாகநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஒருமாதத்திற்கு முன்பாக கத்தாழம்பட்டு ஏரி நிரம்பியது. பாலாற்றில் வரும் தண்ணீர் செதுவாலை, ஒக்னாபுரம், இறையங்காடு ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. தற்போது இந்த 3 ஏரிகளும் 45 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ளது.அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் விண்ணமங்கலம், பள்ளிப்பட்டு, பொம்மிகுப்பம் ஆகிய ஏரிகள் நிரம்பியுள்ளது. மேலும் உதயேந்திரம் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு, 70 சதவீதம் நிரம்பி வருகிறது. தொடர்ந்து, ஏரிகளின் நீர்வரத்து குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் மழை அதிகமாக இருக்கும் என்பதால் நீர்வரத்து கால்வாய்கள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: