கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிட முடியாது என அறிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அது தொடர்பான மனுவையும் தள்ளுபடி செய்தது. இந்தியாவில் கொரோனா 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் 3வது அலையும் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த, தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘இந்திய இளைஞர்கள் சங்கம்,’ என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘நாடு முழுவதும் வயதானவர்கள், மிகவும் நலிந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதற்கான முன்பதிவுகளை செய்ய இயலாதவர்கள் உள்ளிட்டோருக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தும்படி ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டது.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தடுப்பூசி போடுவதற்காக ஒன்றிய அரசு பல்வேறு வசதிகளை செய்து இருந்தாலும், தடுப்பூசிக்கான அதிகாரப்பூர்வ இணைதளம் பல நேரங்களில் முடங்கி போகிறது. அதனால், 24 மணி நேரமும் தடையின்றி செயல்படக் கூடிய புதிய இணையதளத்தை துவக்கலாம். மேலும், நாடு முழுவதும் தற்போது 60%் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்போது நிலைமை மாறி இருக்கும். இதுபோன்ற நிலையில், இந்த வழக்கில் பொதுவான உத்தரவை பிறப்பிப்பது சாத்தியமல்ல. இது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த  விவகாரம் என்பதால், இதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. இருப்பினும், மனுதாரர் தங்களின் கோரிக்கையை ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறையை அணுகி நிவாரணம் கேட்கலாம்,’ என தெரிவித்தனர். மேலும், மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

இழப்பீடு கோரிய வழக்கு தள்ளுபடி

கொரோனா 2வது அலையின் போது, சிகிச்சை அளிப்பதில் காட்டப்பட்ட அலட்சியத்தால் பலர் பலியானதாகவும், எனவே பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோஹ்லி அமர்வு நேற்று தள்ளுபடி செய்தது. 2வது அலையில் பலியானவர்கள் அனைவரும், மருத்துவ அலட்சியத்தால் பலியானவர்கள் என்று கருத முடியாது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டனர்.

Related Stories: