முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் மசினகுடி வன எல்லை கிராமங்களில் கால்நடைகளுக்கு தடுப்பூசி-10ம் தேதி வரை நடக்கிறது

கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளிவட்ட மண்டலத்திற்கு உட்பட்டது மசினகுடி. இந்த ஊராட்சியில் உள்ள மசினகுடி, மாயார்,  மாவனல்லா, வாழைத்தோட்டம், சிறியூர் மற்றும் சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொக்காபுரம், முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுழி, நாகம்பள்ளி, புலியாளம் பகுதிகளில் ஏராளமானோர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ஏராளமான நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகள் வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடப்படுகின்றன. வளர்ப்பு மாடுகளின் மூலம் வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளுக்கு நோய்கள் பரவாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு வருடமும் வனத்துறை சார்பில் வளர்ப்பு கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடமும் நேற்று (7ம் தேதி) முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் தடுப்பூசி முகாம்கள் கிராமம் தோறும் நடத்தப்படுகிறது. மசினகுடி சோலூர் மற்றும் முதுமலை  ஊராட்சிகளுக்கு உட்பட்ட 16 கிராமங்களில் சுமார் 4,600  கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக வனத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறை சார்பில் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பும் வெளியிடப்பட்டு வருகிறது.

Related Stories: