பவுஞ்சூர் – கூவத்தூர் இடையே செல்லும் கல்குவாரி வாகனங்களால் விபத்து அபாயம்

செய்யூர்: பவுஞ்சூர் – கூவத்தூர் பகுதி வழியாக குவாரிகளில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் விதிகள் மீறி செல்வதால் செல்வதால் விபத்துகள் நேரிடுவதோடு சாலைகளும் பழுதாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டாரத்தை சுற்றி ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இந்த குவாரிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் மற்றும் எம்-சாண்ட் மண்ணை ஏற்றி செல்கின்றன. இவ்வாறு செல்லும் கனரக வாகனங்கள் விதிகள் மீறி அதிக பாரம் கொண்ட கற்கள் ஏற்றி செல்வது, அதிவேகமாக செல்வது, தார்பாய்கள் ஏதும் மூடப்படாமல் மண் எடுத்து செல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, கொடூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து பவுஞ்சூர், கூவத்தூர் செல்லும் கனரக வாகனங்கள் விதிமுறைகளை மீறி செல்வதாக பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு விதிமுறைகள் மீறி செல்லும் வாகனங்களில் இருந்து ஜல்லிக்கற்கள் நெடுஞ்சாலையில் சிதறுவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும், உடைக்கப்படாத பெரிய பாறை கற்களை ஏற்றி செல்லும் போது எதிர்பாராத விதமாய் கல் சாலையில் சரிந்து விழும் பட்சத்தில் பெரும் அசம்பாவிதம் நேரிடும் நிலை உருவாகியுள்ளது. மறுபுறம் இந்த கனரக வாகனங்களால் நெடுஞ்சாலையும் கரடுமுரடான சாலையாக மாறிவிடுகிறது. விதிகளை மீறும் இதுபோன்ற கனரக வாகன ஓட்டிகள் மற்றும் குவாரி உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரிகள் நடவடிக்கை
கல்குவாரிகளில் இருந்து எம் சண்ட், ஜல்லி கற்கள், பாறை கற்களை எற்றி செல்லும் லாரிகள் பாதுகாப்பாக எற்றி செல்வதில்லை. மண் லோடு எடுத்து செல்லும்போது, மண் கற்றில் பறக்கிறது. இதனால், அப்பகுதிகளில் புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. பாறாங்கற்கள் கொண்டு செல்லும்போது தார்பாய் போட்டு எடுத்து செல்லாததால் சாலையில் கற்கள் சில நேரங்களில் சரிந்து விழுகின்றன. மண் லோடு, கருங்கல் லோடு ஆகியவை எடுத்து செல்லும்போது தர்பாய் போட்டு எடுத்து செல்லவேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி
கல்குவரில் இருந்து லாரி, டிரக்டர்களில் எடுத்து செல்லும் ஜல்லி கற்கள் சாலையில் விழுகின்றன. இதனால், அவ்வாழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி விடுகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பஞ்சர் போடுவதற்கு தங்களது வாகனங்களை தள்ளி செல்லும் அவல நிலை தொடர்ந்து அரங்கேறி வருகிறது. பஞ்சர் போடுவதற்காகவே, ஒரு தனித்தொகையினை பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்ல வேண்டிய நிலையும் உள்ளது.

சாலைகள் பழுது
பவுஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் இருந்து வரும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரம் (ஓவர் லோடு) ஏற்றி செல்கின்றன. இதனால், சாலைகள் பழுதாகி பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்படுகின்றன. இந்த பழுதுகளை விரைந்து நீக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வருவதில்லை. இந்த மரண பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. அதிலும், இரவு நேரத்தில் உயிர் இழப்பு சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கல்குவாரிகளில் இருந்து புறப்படும் கல்குவாரிகள் இசிஆர் சாலை, மதுராந்தகம் ஆகிய நெடுஞ்சாலைகளில் வழியாக செல்கின்றன. இது போன்ற சந்திப்புகளில் வரும் லாரிகள் தார்ப்பாய் போடப்பட்டுள்ளதா, சரியான அளவில் தா லோடு போடப்பட்டுள்ளதா என கண்கணித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அவ்வாறு செல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதுபோன்று, தொடர்ச்சியாக ஆய்வு செய்து அபராதம் விதித்து வந்தால் ஓவர் லோடு, தார்ப்பாய் இல்லாமல் செல்வது தவிர்க்கப்படும். மேலும், விபத்துகள், ஒரளவுக்கு சாலையில் ஏற்படும் பள்ளங்கள் குறையும். எனவே, அதிகாரிகள் தொடர்ந்த கல்குவாரி லாரிகளை கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பவுஞ்சூர் – கூவத்தூர் இடையே செல்லும் கல்குவாரி வாகனங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: